Blogroll

Sunday 23 September 2012

தஞ்சை மாவட்டம்


தஞ்சை மாவட்டம்
      இம் மாவட்டத்தின் பெயர்க்காரணம், புராண காலத்தில் தஞ்சன் எனும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி வந்தான் என்றும், மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.தமிழையும் தமிழர்களையும் பெருமை படுத்தக்கூடிய எண்ணற்ற சிறப்புகளை தன்னிடம் கொண்டுள்ளது இம்மாவட்டம்.
  
சோழர்கள் காலத்தில் அவர்களின் சிறந்த தலைநகரமாக விளங்கியது. பல நூறு ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழர்களின் சிற்பக்கலை பெருமையை உலக அளவில் நிலைநாட்டிக் கொண்டிருக்கும் பெருவுடையார் கோவில் அமைந்த மாநகரம் இது.தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்ற சிறப்பையும் பெற்றது. மேலும் உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தை கொண்டுள்ளது.இந்நூலகத்தில் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் தமிழுக்கென்று நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.

        இவை மட்டும் அல்லாது தலையாட்டி பொம்மை, மெல்லிசை கருவிகள், கைவினை பொருட்கள், தஞ்சை ஓவியங்கள்,  சிலைகள்... என தஞ்சையின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
தஞ்சை பெரிய கோவில்
                        தஞ்சாவூர் என்றதும் எல்லாருக்கும் நினைவுக்குவர்றது பிரம்மாண்டமான பெருவுடையார் கோவில்,பிரகதீசுவரர் கோவில்னு அழைக்கப்படுகிற தஞ்சை பெரியகோவில் தான்.சோழப் பேரரசன் இராஜராஜனால் கட்டப்பட்ட இக்கோவில் இன்றும் சோழர்களோட பெருமையை நிலைநாட்டிக் கொண்டு நிமிர்ந்துநிற்கிறது.தஞ்சை பெரிய கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்குற மாதிரி 1954ம் ஆண்டு பெரிய கோவிலோட தோற்றம் உள்ள 1000ரூபாய் நோட்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டதுன்றது குறிப்பிடதக்கது.
 (இந்த கோவிலோட பெருமைகளை பத்தி இந்த ஒரு பகுதி சொல்லி முடிக்க முடியாது.விளக்கமா இன்னொரு பகுதில சொல்றேன்.... சரியா.....!) 
புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்
                1680 ம் வருசம் மராட்டிய அரச பரம்பரையை சேர்ந்த வெங்கோஜி சத்ரபதி யால இந்த கோவில் புற்று வடிவில் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாட்டுக்கு வந்தது.பின்னர் இக்கோவிலை சதாசிவ பிரேமந்திரர் என்கிற துறவி அம்மன் சிலையா மாத்தினதா சொல்லப்படுது.....
பழைய மாரியம்மன் கோவில்
                புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு போற மெயின் ரோட்டுல இருந்து இடது கை பக்கமா ஒரு பெரிய சிவலிங்கம் இருக்கும் அதுதான் பழைய மாரியம்மன் கோவில்.
தென்னக பண்பாட்டு மையம்
                இது 1985 ல் ஆரம்பிக்கப்பட்டது. சில வருசத்துக்கு முன்னாடி இதை எல்லாரும் மூலிகைப் பண்ணைனு சொல்லுவாங்க (இன்னைக்கும் பல பேருக்கு இப்படி சொன்னாதான் தெரியும்....!)இது பழைய பஸ் ஸ்டாண்டில்  இருந்து வல்லம் ஊருக்கு போற வழியில இருக்கு. இந்தியாவிலயே மொத்தம் 7இடங்களில் மட்டுமே இந்த பண்பாட்டு மையம் உள்ளது. இதுக்கு தென்னக பண்பாட்டு மையம்னு பேர் வச்சதுக்கு காரணம் தமிழகம்,கேரளா,ஆந்திரா,கர்நாடகா,பாண்டிச்சேரி,அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய 7தென்னிந்திய பகுதிகளை உள்ளடக்கி இருப்பது தான்.
பூம்புகார் விற்பனை நிலையம்
                அத்தியாவசிய பொருட்கள்,அலங்காரப் பொருட்கள் வாங்கனுன்ன அதுக்கான சிறந்த இடம் இது தான். இது தஞ்சை ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கு......
ராயல் பால்கனி
                தஞ்சாவூர் அரண்மனை கிழக்கு வாசல் வழியா போனா ஒரு பெரிய கட்டிடம் இருக்கும் அததான் ராயல் பால்கனி.இது நாயக்கர்கள் மற்றும் மராட்டியர்கள் காலத்துல கட்டப்பட்டது.இதுல இருந்து தஞ்சை நகரம் முழுவதையும் பார்க்கமுடியும்.அந்த காலத்துல மன்னர்கள் எல்லாரும் இங்க நின்னு தான் நகரத்தோட அழக ரசிச்சுருப்பாங்கனு நினைக்கிறேன்........
தமிழ் பல்கலை கழகம்
                சுமார் 900 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த கட்டிடம் தமிழ் ஆராய்ச்சிக்காகவும், மேல்படிப்புக்காகவும் 1981ல் கட்டப்பட்டுச்சு. கிட்டத்தட்ட மிகப்பெரிய அரண்மனை மாதிரி உள்ள இந்த கட்டிடத்தில் மிகப்பெரிய நூலகம் இருக்கு..... இங்க இல்லாத புத்தகங்களே இல்லன்ற அளவுக்கு அத்தனை வகை தமிழ் புத்தகங்களும் இருக்கு.இந்த கட்டிடத்தோட அமைப்பு டெல்லி பார்லிமென்ட் மாதிரியே இருக்கும் (டெல்லிக்கு போக முடியாதவங்க இங்க பாத்துக்கலாம்......!) இந்த கட்டிடத்தோட தனிப்பட்ட சிறப்பு என்னன்னா இதை டாப் வியுவுல(வானத்துல இருந்து......!) பார்த்தா தமிழன்ற வார்த்தை வடிவத்துல தெரியும்......
சிவகங்கை பூங்கா
                மாலை நேரத்தை குடும்பத்தோட இனிமையா செலவிட அருமையான இடம். இந்த இடத்துக்குப் பக்கத்துல ஒரு முக்கியமான இடமும் இருக்கு.... அது என்னன்னு கேக்குறீங்களா.... அது தாங்க வீணை செய்யுற இடம்.இங்க போனா ஒரு அழகான வீணை எப்படி உருவாகுதுன்னு தெரிஞ்சுக்கலாம்.....
தொல்காப்பியர் சதுக்கம்
                இது தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு போற வழில இருக்கு. இந்த இடத்தோட பழைய பெயர் தொம்பன் குடிசை.தொல்காப்பியர் சதுக்கம் 1995ல் 8வது உலகத்தமிழ் மாநாட்டின் போது தொடங்கப்பட்டது.இந்த கட்டிடம் மொத்தம்  5அடுக்குகள் கொண்ட சதுர வடிவத்தில் அமைத்துள்ள கோபுரம் அமைப்புடையது.இதை சுற்றி ஒரு அழகான பூங்கா உள்ளது. இந்த கட்டிடத்தின் மேலிருந்து தஞ்சையின் முழு அழகையும் ரசிக்க முடியும்.
சாஹேப் வலியுல்லா
                இந்த பிரபலமான தர்கா தஞ்சையின் முக்கிய பகுதியான ஆபிரகாம் பண்டிதர் ரோட்டில் இருக்கு.இந்த இடத்துக்கு பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து நிமிசத்துல நடந்தே போயிடலாம்......
பூண்டி மாதா கோவில்
                தஞ்சையில இருந்து 35கி.மீ தொலைவில இருக்குற பூண்டின்ற ஊர்ல இருக்கு.இந்த கோவில் 1714-1718ம் வருசங்களில் வீரமா முனிவரின் முயற்சியால் கட்டப்பட்டது. அப்போது இந்த கோவிலோட பெயர் இராணி இம்மாகுலேட் மேரி.மாதா கோவில்னு அழைக்கப்பட்ட இது பூண்டில இருக்குறது நாலா பூண்டி மாதா கோவில்ன்னு எல்லாராலையும் சொல்லப்படுது.இந்த கோவிலுக்குள்ள ஒரு அருமையான மியூசியமும்,சிறுவர் பூங்காவும் இருக்கு.  


                                 தஞ்சையை பத்தி சொல்லனுன்னா சொல்லிகிட்டே இருக்கலாம். அந்த அளவுக்கு நிறைய இடங்களும் கோவில்களும் நம்ம பண்பாட்டையும் கட்டடக்கலையும் இன்னும் சொல்லிக்கிட்டு இருக்கு. அதனால தான் இந்த பகுதில தஞ்சையை பத்தி மட்டும் சொல்லி இருக்கேன். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களை பத்தி இனி வர்ற பகுதிகள்ள சொல்றேன். (முடிஞ்சா...! எனக்கு தெரிஞ்ச அளவுக்கு........!)


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!