தமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்......!
தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக்கு தெரிந்த வரையில்) முதலில் கூறப்போவது மதுரை மாவட்டத்தைப் பற்றி......!
மதுரை மாவட்டம்
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. உலகின் மிகத்தொன்மையான நகரங்களில் ஒன்று.(2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்தது).தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படுவது இதன் சிறப்பு..... மேலும் மல்லிகை பூ, கோவில்கள்,சித்திரைத் திருவிழா,தெப்பத் திருவிழா, போன்ற எண்ணற்ற சிறப்புகளும் உண்டு.மதுரைக்கு தூங்காநகரம்,ஆலவாய்,கோவில் நகரம், நான்மாடக்கூடல் என்கின்ற சிறப்பு பெயர்களும் உண்டு.முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டு மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய இடங்கள்
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான்.பெரியார் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது. கோவிலின் உள்ளே உள்ள ஆயிரம் கால் மண்டபம் தமிழர்களின் மிகச் சிறந்த கட்டிட கலைக்கு சான்றாக உள்ளது. கோவிலை சுற்றி உள்ள வீதிகள் தாமரை இதழ் விரிந்தது போல அமைந்துள்ளதும் இதன் தனிச்சிறப்பு.
திருமலை நாயக்கர் அரண்மனை
திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்டநாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. இக் கட்டிடம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இன்று இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே எஞ்சியுள்ளதாகக் பலர் கூறுகின்றனர். 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
வண்டியூர் மாரியம்மன் கோயில்
மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில். . திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார்.குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோவிலும் உள்ளது. இங்கிருந்து திருமலை நாயக்கர் மஹாலுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுவது உண்டு.
திருப்பரங்குன்றம்
மதுரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாக கருதப்படுகிறது.
அழகர் கோயில்
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இங்குள்ள மலைக் குகைகளில் ஜைன மத குரு அஜ்ஜைனந்தி மற்றும் அவரது சீடர்கள் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை இந்த மலையில்தான் உள்ளது. சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் இங்கு தான் கோயில் கொண்டிருக்கிறார்.
காந்தி அருங்காட்சியகம்
ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையில் அமைந்துள்ளது. இது தமுக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கரையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இராஜாஜி பூங்கா
மதுரை மாநகராட்சி கட்டிடத்திற்கு அருகில் உள்ளது. காலை முதலே திறந்திருக்கும். மாலையில் குடும்பத்துடன் சென்று பொழுதுபோக்க சிறந்த இடம்.
எகோ பார்க்
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானது ஈகோ பார்க். இது குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விடுமுறை காலங்களில் இசையுடன் கூடிய நீருற்று நிகழ்ச்சி நடை பெறுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை போட்டிங் செய்யும் வசதியும் உண்டு.
கோச்சடை அய்யனார் கோவில்
மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
விரகனூர்
மதுரை நகரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. நகருக்குள் இருக்கும் சிறிய அணைக் கட்டு. வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடம்.
குருவித்துறை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.
ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்
மதுரை ரயில் நிலையத்திலிருந்து 10 கி .மீ தொலைவில் அமைந்துள்ளது. மிகப்பழமையான தியான மண்டபங்களில் இதுவும் ஒன்று.
திருமோகூர் கோயில்
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள விஷ்ணு கோயில்.
திருவாதவூர் கோயில்
மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவன் கோயில்.சைவ சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்
கது.
கது.
குட்லாம்பட்டி அருவி
மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அருவி சிறுமலைக் குன்றில் 87 அடி உயரத்திலிருந்து கொட்டுகிறது. இதற்கு அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
வைகை அணை
மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் வைகை அணை உள்ளது.
( குறிப்பு : எனக்கு தெரிந்த வரையில் தகவல்களை பகிர்ந்துள்ளேன். ஏதாவது குற்றம் குறை இருப்பின் தெரியப்படுத்தவும். மேலும் தங்களுக்கு தெரிந்தவற்றையும் தங்கள் மேலான கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். )
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!